பால்ட் மீட்டர் இணையதளத்தை இணைய நீதிமன்றம் என்று சொல்லலாம். அதற்காக வழக்கு தொடுக்க முடியும் என்று பொருள் இல்லை.
இங்கு வக்கீல்களும் கிடையாது. வாதமும் கிடையாது. ஆனால் நீதிபதிகள் உண்டு. உங்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கோ, உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விக்கோ இங்கே தீர்ப்பை பெறலாம்.
அதாவது நான் செய்தது தவறா என்று இங்கு கேட்டு அதற்கான பதிலை பெறலாம். இந்த கேள்வி உள்ளவர்கள் உங்கள் கதையை சொல்லி யார் பக்கம் நியாயம் என்று தீர்ப்பு சொல்ல கேட்கலாம்.
உதாரணத்திற்கு உங்கள் நண்பர் துரோகம் செய்து விட்டதாக நீங்கள் நினைத்து உள்ளம் குமுறலாம். அப்போது யாரிடமாவது நடந்ததை சொல்லி யார் செய்தது சரி என்று கேட்க விரும்புவீர்கள் அல்லவா? இது போன்ற நேரங்களில் இந்த தளத்தில் உங்கள் கதையை சமர்பித்து இதன் உறுப்பினர்களிடம் நியாயம் கேட்கலாம்.
உறுப்பினர்கள் உங்கள் கதை படித்துவிட்டு தங்கள் ஆமோதிப்பு அல்லது எதிர்ப்பை வாக்குகளாக தெரிவிப்பார்கள். உங்களுக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தால் நாம் எந்த தப்பும் செய்யவில்லை என்று நீங்கள் நிம்மதி அடையலாம். வாக்குகள் குறைவாக இருந்தால் உங்கள் பக்கம் தவறு இருக்கலாம் என்பதை ஏற்று கொள்ள வேண்டும்.
வாக்கு செலுத்துவதோடு உறுப்பினர்கள் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை கருத்துக்களாக பதிவு செய்யலாம். பிரச்சனையை புரிந்து கொண்ட வகையிலோ அல்லது ஆறுதல் வார்த்தைகளாகவோ அவை அமையலாம்.
இதெற்கெல்லாமா கவலைப்படுவது என்பது பொலவோ இது எல்லோரும் செய்யகூடியது தான் என்று யாராவது சொல்லும் போது குற்ற உணர்ச்சியில் தவிப்பவர்கள் சமாதானமாகலாம்.
இதற்கு மாறாக எதிர் தரப்பின் நியாயத்தை பொட்டில் அறைவது போல கூறி உண்மையை புரிய வைக்கலாம். மற்றவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் புதிய புரிதலை ஏற்படுத்தவும் செய்யலாம்.
பாதிக்கப்பட்டதாக கருதுபவர்களும் சரி, தெரியாமல் பிறருக்கு தீங்கு இழைத்ததாக வருந்துபவர்களும் சரி இங்கு தங்கள் கதையை சமர்பித்து உறுப்பினர்கள் வழங்கும் தீர்ப்பை கேட்கலாம்.
பிறரிடம் சொல்ல முடியாத ரகசியத்தையும் இங்கே பகிரலாம். யாரிடமாவது சொல்ல நினைப்பவற்றையும் பகிரலாம். இல்லை உரையாடலில் ஈடுபட விரும்பும் விஷயத்தையும் பகிரலாம்.

உறுப்பினராவது மிகவும் சுலபம். உறுப்பினரான பின் மனதில் உள்ளதை சுருக்கமாக அல்லது விரிவாக அவரவர் விருப்பத்திற்கேற்ப கதை போல பகிர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு பகிரப்படும் கதைகள் அவற்றின் தன்மைக்கேற்ப பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. சர்சைக்குறியவை, குடும்பம் சார்ந்தவை, நட்பு சார்ந்தவை, உறவு தொடர்பானவை என கதைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குகள் அதிகம் பெறுபவை மற்றும் புதியவை என்றும் கதைகள் முன்னிறுத்தப்படுகின்றன.
மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள், சண்டைகோழிகள், மெல்லிய மனம் கொண்டவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். நான் செய்தது தவறா என கேட்க நினைப்பவர்களும் பயன்படுத்தலாம். நான் தவறு செய்தேனா என் கேட்க நினைப்பவர்களும் பயன்படுத்தலாம்.
உள்ளத்தில் உள்ளதை கொட்ட நினைப்பவர்கள் மட்டும் அல்ல மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க நினைப்பவர்கள் இங்கு சமர்பிக்கப்படும் கதைகளை படித்து தீர்ப்பு வழங்கலாம்.
சுவாரஸ்யமான தளம் தான். நான் செய்தது சரியா என இணையவாசிகளிடம் கேட்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் இதன் நோக்கம். ஆனால் நடைமுறையில் எந்த அளவுக்கு பயன் தரும் என்று தெரியவில்லை.
முதலில் இந்த தளம் தொடர்ந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு அதன் பின்னே ஒரு உயிரோட்டமான சமூகம் உருவானால் தான் பகிர்வதிலும் கருத்து கேட்பதிலும் பயன் இருக்கும்.
அதோடு பகிர்வும் உண்மையாக இருக்க வேண்டும். கருத்துக்களும் நேர்மையானதாக இருக்க வேண்டும். ரகசியம் என்ற பெயரில் கற்பனை கதைகளோ ஆபாச குவியலோ பகிரப்பட்டால் இதன் நோக்கமே வீணாகிவிடலாம்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment