”அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.
இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :
எதிர்பார்ப்பில்லாத அன்பு
அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.
தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.
அரவணைப்பு அவசியம்
தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
கட்டிப்பிடி வைத்தியம்
ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment